பொன்னேரியில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் 1000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அண்ணா சிலை அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து ஜிஎஸ்டி வரி வசூல் செய்யும் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணிப்பதை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்தி வருவதாக குற்றம் சாட்டினர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மக்கள் நல திட்டங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குவதில்லை எனவும் புகார் தெரிவித்தனர். பழிவாங்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு கைவிட்டு சாலை பணிகள், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றுக்கான நிதியை முறையாக விடுவிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு