புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள லெம்பலக்குடி கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை வகித்தார். இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், 257 பயனாளிகளுக்கு ரூ.1,53,98,930 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாதந்தோறும் ஒரு குக்கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்றையதினம் திருமயம் வட்டம், லெம்பலக்குடி வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாமில், தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரும் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இம்மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுவின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்று நடைபெறும் முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள வேண்டும் என்றார். இம்முகாமில் உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி